472. Madhwa Marriage – Part IV

மாத்வா கல்யாணம் பற்றின நம்முடைய முதல் வலைப்பதிவில் திருமணம் நடத்த முடிவெடுத்தபின், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தோம். இரண்டாவது வலைப்பதிவில், மண்டபத்திற்கு மணமக்கள் வீட்டார் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைப் பற்றிப் பார்த்தோம். மூன்றாவது வலைப்பதிவில் முகூர்த்ததிற்கு முதல் நாள் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டோம். இந்த வலைபதிவில் முகூர்த்தம் நடக்கும் நாளன்று நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போமா!

முதல் நாள் எவ்வளவு லேட்டாகப் படுத்துறங்கினாலும், முகூர்த்த தினத்தன்று பெண் வீட்டார், மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அதிகாலையில் விழித்தாக வேண்டும். பெண்/அவர் பெற்றோரை மணையில் அமர்த்தி, கூட ஒருவரையும் அமரச்செய்து எண்ணெய் சாஸ்திரம் செய்ய வேண்டும்.  நான்கு பேர் கையிலும் வெற்றிலை, பாக்கு கொடுத்து, இரண்டு சுமங்கலிகள் சேர்ந்து ஆரத்தி எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெயை எடுத்துக் கொண்டு, ஒரு பூவால் மூன்று முறை எல்லார் தலையிலும், கன்னம், கை பாகங்களிலும் தேய்க்க வேண்டும். இதே போல மாப்பிள்ளை மற்றும் அவர் பெற்றோருக்கும் அவர்கள் உறவினர்கள் செய்வார்கள். எல்லாரும் எண்ணெய் தேய்த்தக், குளித்து முடித்தபின்,  பெண் கௌரி பூஜைக்கும், மாப்பிள்ளை காசி யாத்திரைக்கும் தயாராவார்கள்.

21.கௌரி பூஜை : பார்வதி, பரமசிவன் படத்தையும், கௌரி முகத்தையும் வைத்து, மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, கோலம் போட்டு, காவி பூசி, குத்து விளக்கை ஏற்ற வேண்டும். பெண் வீட்டாரைச் சேர்ந்த பெரிய சுமங்கலி ஒருவர் பூஜையை நடத்தி வைப்பார். மாப்பிள்ளையின் தாயார், மற்றும் மாப்பிள்ளையின் உறவினரான மற்ற சுமங்கலிகளையும் பூஜைக்கு அழைக்க வேண்டும். மஞ்சள்பொடி, மற்றும் சிறிது அரிசி மாவு கலந்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, 5 கிண்ணங்கள் செய்து, ஒரு தட்டில் வைத்து, ஐந்திலும் பூத்திரி போட்டு, நெய்யூற்றி, தெம்பிட்டாரத்திக்கு ரெடியாக வைக்க வேண்டும்.   கல்யாணப்பெண் மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, கஜவஸ்திரம் கொண்டு பார்வதி, பரமசிவனை வேண்டி, மாப்பிள்ளை காசி யாத்திரைக்குத் தயாராகும் நேரத்தில், துளசி பூஜை செய்தபின், கௌரியை பூஜிக்கத் துவங்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்களை ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். ஊதுபத்தி ஏற்ற வேண்டும். கௌரி பூஜை மற்ற சுமங்கலிகளும் செய்ய வேண்டும். பூஜை செய்த சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். 7 முறதுபாயண செட்டுக்கு பெண் பூஜை செய்தபின், தெம்பிட்டாரத்தி, கற்பூர ஆரத்தி, சொடலாரத்தி எடுக்க வேண்டும். அதில் ஒரு செட் முறதுபாயணத்தை பெண் தன் தாய்க்கு வழங்கவேண்டும். இதை தாய் முறதுபாயணம் என்பார்கள். இன்னொன்றை மாப்பிள்ளையின் அம்மாவுக்குப் பெண் தர வேண்டும். மற்ற 5 முறதுபாயணங்களை பெண் வகை உறவினருக்குத் திருமணம் முடிந்தபின் வழங்க வேண்டும். மணப்பெண் கௌமாரி குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் கொண்டு வந்த 5 முறதுபாயணங்களை  நாகவல்லி முடிந்ததும், தங்கள் வகை உறவினர்களுக்குப் பெண்ணின் கையால் வழங்குவார்கள்.

22.முறதுபாயணம் : முறதுபாயண செட் ஒன்றிற்கு 2 முறங்கள் வேண்டும். முறங்களுக்கு சாணி தடவி சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் முறத்தின் இரு புறங்களிலும் தடவ வேண்டும். இப்போதெல்லாம் அலங்கரிக்கப்பட்ட முறங்கள் கடைகளில் விற்கப் படுகின்றன. அதை அப்படியே வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். சிறு, சிறு பாக்கெட்டிகளில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி, வெல்லம், பூத்திரி-2, கஜவஸ்திரம்-1, மஞ்சள்-குங்குமம் பாக்கெட், காதோலை-கருகுமணி, சீப்பு, கண்ணாடி, கண்மை, மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, ரவிக்கை, வெள்ளி மெட்டி ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு முறத்தில் பொருட்களை வைத்து, மற்றொரு முறத்தை எதிர்ப்பக்கம் வைத்து மூட வேண்டும். முறதுபாயணம் வாங்குபவர் கிழக்கு நோக்கி அமர வேண்டும். கொடுப்பவர் அவருக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, உருட்டாணி செய்தபின், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், தக்ஷணை கொடுத்து, முறத்தைத் தன் சேலையின் மேல் பாகத்தால் மூடிக் கொண்டு, “சாவித்திரி சாவித்திரி பாயணம் தொகோ(வாங்கிக்கொள்)” என்று சொல்ல வேண்டும். வாங்குபவர் தன் புடவையின் கீழ்பாகத்தால் முறங்களைப் பிடித்துக் கொண்டு “முத்தைதே, முத்தைதே பாயண கொடு” என்று சொல்ல வேண்டும். இருவரும் கொடுப்பது போலவும், வாங்குவது போலவும் முறங்களை ஆட்ட வேண்டும். இதேபோல மூன்றுமுறை செய்தபின், முறங்களைத் தந்துவிட வேண்டும். வாங்குபவர் அதைத் திறந்து வைக்க வேண்டும்.

23.காசி யாத்திரை : காசி யாத்திரைக்கு மாப்பிள்ளைக்குத் தேவையான பொருட்களைப் பெண் வீட்டார் வாங்கி ரெடியாக வைத்தால் போதும். மற்றவற்றை புரோகிதர் பார்த்துக் கொள்வார். என்னென்ன பொருட்கள் தேவைப் படுமென்று பார்ப்போமா ?

1.9 X 5 வேஷ்டி

2.அங்கவஸ்திரம்

3.வாக்கிங் ஸ்டிக்

4.விசிறி

5.குடை

6.துப்பட்டா (குடை மேல் விரிப்பதற்கு)

7.பித்தளைத் தாம்பாளம்

8.பித்தளை சொம்பு

9.கர்ண குண்டலம்

10.கண்மை

11.செருப்பு

12.ஜோல்னாப்பை

13.பகவத்கீதை புத்தகம்

மேற்கண்ட சாமான்கள் அலங்காரமாக ஒரே கலரில் செட்டாக கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கின்றன.

காசி யாத்திரை முடிந்ததும், மாப்பிள்ளைக்குப் பெண்ணின் பெற்றோர் பித்தளைத் தாம்பாளத்தில் கால் அலம்பி, சகல மரியாதையுடன், மேள, தாளம் முழங்க, உள்ளே அழைத்துச் செல்வர். மணமேடைக்கு வரும்போது, மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் பாசிங்கத்தை நெற்றியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

24.அந்தர்பட்டா : மணப்பெண்ணை தாய்மாமா தான் மேடைக்கு அழைத்து வர வேண்டும். பெண்ணும், அவர் பெற்றோரும், அவர்வகை உறவினர்களும் ஒரு புறம் நிக்க, மாப்பிள்ளையும், அவர் பெற்றோரும், அவர் வகை உறவினர்களும் எதிர்புறமும் நிற்பார்கள். நடுவில் ஒரு ஸ்கிரீன் போன்ற துணியை இருவர் பிடித்துக் கொள்வர். எல்லா புரோகிதர்களும் சேர்ந்து மந்திரம் ஓதுவார்கள். பெண், மாப்பிள்ளை கைகளில் ஜீரகத்தையும், வெல்லத்தையும் தருவார்கள். மந்திரம் ஓதி முடித்து ஸ்கிரீன் விலகும்போது பெண் மாப்பிள்ளையின் காலடியில் ஜீரகம், வெல்லத்தைப் போடுவார். மாப்பிள்ளை ஜீரகம், வெல்லத்தை பெண் மீது போடுவார்.

25.கன்யாதானம் : மணப்பெண்ணின் வலது கையை மணமகனின் வலது கையில் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், லக்ஷ்மிநாராயண விக்ரகம் அல்லது கிருஷ்ண விக்கிரகம்  ஆகியவற்றை அந்த இணைந்த கைகளின் மேல் வைப்பார்கள். புனித நீரை மணமகளின் தந்தை  அதன்மேல் ஊற்றி, தன் மகளை மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பார். கன்யாதானத்தின் போது மணப்பெண் லக்ஷ்மி சொரூபமாகவும், மணமகன் விஷ்ணுவின் சொரூபமாகவும் கருதப்படுகின்றனர். காலம் முழுவதும் பெண்ணைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வதாக, மணமகன் மணமகளின் வலது தோளின் மீது கை வைத்து உறுதி கொடுப்பார்.

26.கங்கண தாரம் : மாப்பிள்ளையும், பெண்ணும், திருஷ்டி படாமலிருக்க கையில் கட்டிக் கொள்ளும் கயிறு தான் கங்கண தாரம் என்றழைக்கப் படுகிறது. பெண்ணும், மாப்பிள்ளையும் நடுவே அமர்ந்திருக்க, பெண் வீட்டைச் சேர்ந்த 5 தம்பதிகளும் (பெண்ணின் பெற்றோர் உட்பட), மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த 5 தம்பதிகளும் (மாப்பிள்ளையின் பெற்றோர் உட்பட) வட்டமாக மணமேடையில் பெண்/மாப்பிள்ளையை சுற்றி நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ, புரோகிதரின் வழிகாட்டுதலின்படி, பாலில் நனைத்த 2 நூல் பந்துகளை தனித்தனியாக வாங்கி, அடுத்த தம்பதிகளீடம் அளிப்பார்கள். இறுதியில் ஒரு மஞ்சள் கிழங்கை ஒவ்வொரு கயிற்றிலும் கட்டி வைப்பார். பெண், மாப்பிள்ளையை எதிர், எதிராக அமர வைத்துத் தாலி, மற்றும் கங்கணதாரத்திற்கு பூஜை செய்யச் சொல்வார்கள். அரிசியையும், மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த அட்சதையையும், மூன்று முறை மணமக்கள் ஒருவர் தலையில் மற்றொருவர் போட்டு விடுவர்.

27.மாலை மாற்றுதல் : மஞ்சள் அட்சதையை மணமக்கள் ஒருவர் தலையில் மற்றொருவர் போட்டு விடுவர். அது முடிந்ததும், பெண்ணும், மாப்பிள்ளையும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்வர். இருபக்கமும் உறவினர், மற்றும் நண்பர்கள் வேடிக்கையாகப் பேசி, கலாட்டா செய்து கொண்டிருப்பர். கங்கணதாரத்தைப்  பெண், மாப்பிள்ளையிடம் புரோகிதர் கொடுத்து, ஒருவர் கையில் மற்றவரைக் கட்டி விடச் சொல்வார்கள். இதையே கங்கணதாரம் கட்டுதல் என்பார்கள். தாலி கட்டி முடிந்தவுடன் கூட, இந்த கங்கணதாரம் கையில் இருக்கும் வரை யாரும், பெண் / மாப்பிள்ளையுடன் கை குலுக்கக் கூடாது.

28.மாங்கல்யதாரணம் : மணமக்கள் வேத கோஷங்கள் ஒலிக்க, புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத, இறைவனைப் பிரார்த்தித்தவாறு இருப்பர், ஹோமமும், பூஜையும் நடக்கும் போது. ஒரு தட்டில் தாலியை தாம்பூலத்துடன் வைத்து, ஒருவர் எடுத்துச் சென்று அனைவர் ஆசியையும் பெற்று வருவார். அனைவருக்கும் மாங்கல்யதாரத்தின் போது மணமக்களை ஆசிர்வதிக்க அட்சதையும், பூவும் வழங்கப்படும். அனைவரின் ஆசியுடன், மணமகன் முதல் இரண்டு முடிச்சுகளைப் போட, மணமகனின் சகோதரி மூன்றாவது முடிச்சைப் போடுவார். அவருக்கு மணமகள் வீட்டார் ஒரு புடவை, ரவிக்கையை வைத்துக் கொடுப்பர்.

29.லாஜ ஹோமம் : மணப்பெண்ணின் சகோதரர் மணமக்களுடன் வந்து அக்னி முன்பு அமர்ந்து கொள்வார். அவர் பொரியைத் தன் சகோதரியின் கரங்களில் அளிக்க, அவர் தன் கணவன் கரங்கள் மூலமாக அக்னிக்கு சமர்ப்பிக்க வேண்டும், மூன்று முறை. அக்னிகயில் பசும்நெய் வார்க்க வேண்டும். மணமகள் இருவரின் நீண்ட ஆயுள், சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவற்றிற்காகப் பிரார்த்திப்பார்.

30.அம்மி மிதித்தல் : மணப்பெண் புது வாழ்க்கைக்குத் தயாராவதை இந்த சடங்கு உணர்த்துகிறது. வாழ்வில் வரும் ஏற்ற – இறக்கம், சுக – துக்கம், நன்மை – தீமை எல்லாவகற்றிலும் இருவரும் சம பங்கேற்று வாழ்க்கை நடத்துவதாக இருவரும் உறுதிமொழி எடுப்பர். மணமகன் மணமகளின் காலை அம்மியின் மீது வைத்து மெட்டி அணிவிப்பார்.

31.சப்தபதி : மணமக்கள் அரிசியின் மேல் ஏழு அடி எடுத்து வைப்பர். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாக்கு எடுத்துக் கொள்வர் புது மணத் தம்பதியர். முதல் அடிக்கு, அன்பையும், உணவையும் இருவரும் பகிர்ந்து கொள்வதாக வாக்களிப்பார்கள். இரண்டாவது முறை உடல், மற்றும் மனபலத்துடன் நோயற்ற வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்பர். மூன்றாவது அடிக்கு, ஆன்மீகக் கடமைகளைக் குறைவற நிறைவற்றுவதாக உறுதியெடுப்பர். நான்காவது முறை வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியுடன் இருவரும் இருப்பதாக வாக்கெடுப்பர். ஐந்தாவது முறை குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பர். ஆறாவது அடிக்கு, ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை, அக்கறையுடன் நடக்க அருள்புரியுமாறு இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்வர். ஏழாவது முறை தியாகத்தையும், விட்டுக் கொடுத்தலையும் பேணுவதாக உறுதியெடுப்பர். மண்டபத்திலுள்ள அத்தனை பேரின் வாழ்த்துக்களுடன், இருவரும் கணவன், மனைவியாக மாறுவர். மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவார்.

32.அக்னியை வலம் வருதல் : மாப்பிள்ளையின் மேல்வேஷ்டியையும், மணப்பெண்ணின் புடவையின் மேல்பாகம் அதாவது பள்ளுவையும் சேர்த்து முடி போட்டு, அக்னியை 3 முறை வலம் வருமாறு புரோகிதர் சொல்லுவார்.

33.அருந்ததி பார்த்தல் : புனித நீரை மணமக்களின் மீது தெளித்துவிட்டு புரோகிதர் அர்த்தமுள்ள, முழுமையான வாழ்க்கை அமைய சூரியனை வேண்டுமாறு அவர்களிடம் கூறுவார். அதன்பின், தங்கள் உறுதிமொழிகளையும், கடமைகளையும் அருந்ததி நட்சத்திரம் போல நிலையாக நின்று நிறைவேற்றுவதாக மணமக்கள் உறுதியெடுப்பர். அருந்ததி வசிஷ்ட முனிவருக்கேற்ற தர்மபத்தினியாக இருந்து தன் கடமைகளை சரிவர நிறைவேற்றியதற்காக போற்றப் படுபவராவார். மதிய உணவின் போது மணமக்கள் ஒரே இலையில் பூம விருந்து உண்ணுவார்கள். நண்பர்களும், உறவினர்களும் சுற்றி நின்று கேலி செய்ய ஒரே கலாட்டாவாகத்தான் இருக்கும். பெண் வீட்டு உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டு உறவினர்களும் உடன் உணவு அருந்துவார்கள்.

34.நலங்கு : சில வேடிக்கையான விளையாட்டுகள் மணமக்களுக்கு நடத்தப்பட்டு, அவர்களிடையே சகஜ நிலை உருவாக்கப்படும். ஒரு சொம்பில் மோதிரத்தை மற்ற பொருட்களைப் போட்டுவிட்டு, பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே நேரத்தில் கைவிட்டு எடுக்கச் சொல்வது, உப்பு யானை/அரிசி யானை வேண்டுமா என்று மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் கேட்பது போன்ற பல விளையாட்டுகள் நடைபெறும்.

35.நாகவல்லி : மணப்பெண் தன் மாமியார் பரிசளித்த ஒன்பது கெஜம் புடவையை உடுத்திக் கொண்டு, நாகவல்லிக்குத் தயாராவார். அலங்காரம் செய்யயப்பட்ட சில மண்பானைகள் நாற்புறமும் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு மண்பானைகளை வைத்து, ஒரு நூலால் நாற்புறமும் கட்டியிருப்பார்கள். திருமண வாழ்வில் தம்பதிகளுக்கு உள்ள பொறுப்புகளைப் புரோகிதர் எடுத்துரைத்து, சில சடங்குகள் செய்யச் சொல்லுவார்.  அதன்பின், மணமகன் நாகவல்லித் தாலி மணமகளுக்குக் கட்டுவார். அதன்பின், மணமக்கள், மணமகளின் தாய், மணமகளின் தாய்மாமா, அத்தை சுற்றி வந்து புரோகிதர் சொல்ல, சில சடங்குகள் செய்வார்கள். மணமக்களுக்கு ரக்ஷை நெற்றியில் வைக்கப்படும்.   மணமகனின் இளைய சகோதரி மணப்பெண், மாப்பிள்ளை இருவருக்கும் கால் அலம்பி, உருட்டாணி செய்வார். அவருக்கு மணப்பெண்ணின் தாயார் புடவை, ரவிக்கை வைத்துக் கொடுப்பார். அதன் பின்  மாப்பிள்ளை, மணப்பெண், இருபக்க உறவினர்கள்,  இரு மரப்பாச்சி பொம்மைகளைத் துணியில் சுற்றி தொட்டிலில் இட்டு, அனைவரும் ஆட்டுவார்கள். பின் அவற்றை மணமக்கள் எடுத்து வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்குவர்.

36.கிரஹப்பிரவேசம் : இதை மாங்கல்யதாரணம் முடிந்த பிறகு, நல்ல நேரம் பார்த்து செய்வார்கள். மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் தங்கியுள்ள அறைக்கு அழைக்கப் படுவார்கள். மணப்பெண் உள்ளே நுழையும்போது, ஒரு படியில் பச்சரிசியையும், வெல்லத்தையும் வைத்து, அதை அவர் வலது காலால் உள்ளே விழுமாறு தட்டி விட்டுவிட்டு நுழைய வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் விருப்பப்பட்டால், மணமகளின் பெயரை மாற்றுவார்கள். புதுப் பெயரை அரிசியில் ஒரு மோதிரத்தால் மாப்பிள்ளையை எழுதச் சொல்வார்கள். பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் ஜூஸ், தாம்பூலம் கொடுத்து உபசரிப்பார்கள். மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது, மணப்பெண் வீட்டினுள் நுழையும் போது, திரும்பவும் கிரஹப்பிரவேச நிகழ்ச்சி நடக்கும்.

37.பெண் ஒப்படைத்தல் : எல்லா சடங்குகளும் முடிவடைந்த பின், பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாப்பிள்ளை வீட்டு மூத்த உறவினர்கள், மற்றும் மாப்பிள்ளையின் பெற்றோரின் உடன் பிறந்தவர்கள் தம்பதிகளாக வரிசையாக அமர, ஒவ்வொரு தம்பதியிடமும் மணப்பெண் ஒப்படைக்கப் படுவார். கடைசியாக, மாப்பிள்ளையின் பெற்றோரிடமும், மாப்பிள்ளையிடமும் ஒப்படைக்கப் படுவார். மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர்களுக்கு வாங்கிய துணிமணிகளைப் பெண்ணின் பெற்றோர் வழங்க, அதேபோல் அவர்களும் பெண் வீட்டாரின் உறவினர்களுக்கு வாங்கிய துணிமணிகளை வழங்குவார்கள்.

38 : சாந்தி முகூர்த்தம் : முகூர்த்தம் முடிந்த அன்று இரவு மண்டபத்திலோ, அல்லது மணமகள் வீட்டிலோ சாந்தி முகூர்த்தம் நடக்கும். மணமக்கள் சாந்தி முகூர்த்த அறைக்குள் நுழையும் போதும், அடுத்த நாள் காலை வெளியே வரும்போதும், நாராயணன்-லக்ஷ்மி பற்றின பாடல்களை வெளியே இருந்தவாறு பெரியவர்கள் பாடுவார்கள். மணமக்களை நாராயணன்-லக்ஷ்மி அம்சமாகவே கருதுவார்கள்.

அடுத்த வலைப் பதிவில் மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s