471. Madhwa Marriage – Part III

முதல் வலைப்பதிவில் திருமணம் தொடர்பான ஆரம்ப வேலைகளைப் பற்றிப் பார்த்தோம். இரண்டாவது வலைப்பதிவில், பெண் வீட்டாரும்,  மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருமண மண்டபத்தில் முகூர்த்தத்திற்கு முதல் நாள் நடக்கும் சுப நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போமா ! திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்த சடங்கு எங்கள் வீட்டுத் திருமணத்தில்  நடக்கவில்லையே, நிகழ்வுகள் வரிசை மாறி இருக்கிறதே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடும்பப் பழக்கமும் சிறிது வித்தியாசப் படலாம். எதுவும் தவறில்லை.

11.மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்கான சாமான்கள் : பெண் வீட்டார் வாசலிலே காத்திருந்து, மாப்பிள்ளை வீட்டார் வரும்போது மேள, தாளத்துடன் வரவேற்க வேண்டும். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு சந்தனம் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை, அவர் பெற்றோர், முக்கிய உறவினர்களுக்கு மாலை, மரியாதை செய்ய வேண்டும். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும். அனைவருடைய பொருட்களை எடுத்துச் செல்ல உதவி, ரூமிற்கு அழைத்துச் சென்று, குடிக்க காபி/டீ தருவித்து உபசரிக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்தினம், அதாவது ஜானவாசத்தன்று காலையிலிருந்தே மண்டபத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமாகி விடும். அவை என்னென்னவென்று பார்ப்போமா ?

12.தேவுரு சமாராதனை : இதை புரோகிதர் நடத்தி வைப்பார். ஒரு பிரம்பை ஒரு வேஷ்டி, புடவை கொண்டு அலங்கரித்து பூஜை செய்யச் சொல்லுவார். பின், அதை பெண்/மாப்பிள்ளை உடுத்த வேண்டும். தேவுரு சமாராதனை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரைக் கொண்டு செய்வர்.

13.சொண்டிகை முகூர்த்தம் : இதை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக செய்வது வழக்கம். புரோகிதர் கூட தேவையில்லை. ஒரு சிறிய வெள்ளை காடாத்துணி/கர்ச்சீப் எடுத்துக் கொண்டு மஞ்சள் நீரில் முதலே நனைத்து, உலர்த்தி எடுத்து வர வேண்டும். மஞ்சள் இடிக்கும் விழாவில் இடித்துப் பொடி செய்த மஞ்சள் தூளையும் எடுத்து வர வேண்டும். மஞ்சளை தண்ணீர் விட்டு சிறிது அரிசிமாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல செய்து கொள்ள வேண்டும். சுமங்கலிகள் / பெண் / மாப்பிள்ளை சிறு சிறு உருண்டைகளாக (சொண்டிகை போல) பிடித்து கர்ச்சீப் மேலே வைக்க வேண்டும். அதன் மேல் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும். எல்லாரும் வைத்து முடித்த பின்பு அதை ஸ்வாமி படத்தின் முன்பு வைத்து வழிபட வேண்டும். பின், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று துளசிச் செடிக்குக் கரைத்து விடலாம்.

14.அஷ்டவர்க்கம் : பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரை வைத்துக் கொண்டு, தங்கள் நெருங்கிய பந்துகளுக்கு வாங்கிய உடைகளை பரிசளிக்க வேண்டும். பெண்/மாப்பிள்ளை, மற்றும் பெற்றோர் பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசியும் பெற வேண்டும். இதை பாத பூஜை என்றழைப்பார்கள். அவ்வாறே மற்றவர்களும் பெண்/மாப்பிள்ளையின் பெற்றோருக்கு திருமணத்திற்காக வாங்கின உடைகளைப் பரிசளிப்பார்கள்.

15.நாந்தி : பித்ரு தேவதைகளுக்கான பூஜையே நாந்தி என்பது. இதையும் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனி புரோகிதரின் துணை கொண்டு தனித்தனியாக செய்வார்கள். சில ரவிக்கைத் துண்டுகளைத் தயாராக வைத்திருந்தாலே போதும். மற்றவற்றை புரோகிதர் பார்த்துக் கொள்வார்.

இவை முடிந்த பின், அனைவரும் மதிய உணவு அருந்திவிட்டு, பெண் பார்க்கும் வைபவத்தைத் துவங்கலாம்.

16.பெண் பார்க்கும் வைபவம் : பெண்ணை அவருடைய பெற்றோருடன் மேடையில் அமர்த்தி, தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தட்டுகளில் வைத்து மாப்பிள்ளை வீட்டார் வழங்குவார்கள். அவை

1.பெண்ணுக்கான புடவை, ரவிக்கை

2.அலங்காராப் பொருட்களான கண்மை, முகப் பூச்சு, பவுடர், ஐலைனர், ஐப்ரோ பென்சில், பொட்டு, வளையல், ஹேர் கிளிப், கர்ச்சீப் போன்றவை.

3.பெண்ணுக்கான சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம்

4.கைப்பை மற்றும் பர்ஸ்

5.பெண்ணுக்கான நகை

6.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.

7.கடலை உருண்டைகள்

8.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்

9.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்

10.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)

11.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு

கொப்பரை

12.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)

13.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2

14.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6

15.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்

16.வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்

17.பூ

18.ஐந்து வகை பழங்கள்

19.டிரை ஃப்ரூட்ஸ்

20.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.

21.ஐந்து தேங்காய்கள்

22.ஒரு வெள்ளி டம்ளர்

23.அலங்கார பொம்மைகள்

24.கல்கண்டு

25.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது

26.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)

27.கலர், கலர் சாக்லேட்

17.வரபூஜை :  பெண் வீட்டார் மாப்பிள்ளை வகை முக்கிய உறவினருக்கு பொக்கிட்டு கொடுத்து மரியாதை செய்வர். அதேபோல் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டைச் சேர்ந்த முக்கியமான நபர்களுக்கு பொக்கிட்டு கொடுப்பர். பெண் வீட்டாரும் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய கீழ்க்கண்ட பொருட்களைத் தட்டுகளில் வைத்து, மாப்பிள்ளை தன் பெற்றோருடன் மேடையில் அமர்ந்ததும் வழங்குவார்கள்.

1.மாப்பிள்ளைக்கான் கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், பெல்ட், வாலட்

2.அலங்காராப் பொருட்களான முகப் பூச்சு, பவுடர், சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம், ஷேவிங் செட்

3.மாப்பிள்ளைக்கான நகை

4.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.

5.கடலை உருண்டைகள்

6.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்

7.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்

8.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)

9.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு

கொப்பரை

10.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)

11.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2

12.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6

13.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்

14.வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்

15.பூ

16. ஐந்து வகை பழங்கள்

17.டிரை ஃப்ரூட்ஸ்

18.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.

19.ஐந்து தேங்காய்கள்

20.அலங்கார பொம்மைகள்

21.கல்கண்டு

22.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது

23.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)

24.கலர், கலர் சாக்லேட்

18.ஜானவாச ஊர்வலம் : மாப்பிள்ளை குழந்தைகள் புடை சூழ, திறந்த அலங்கரிக்கப்பட்ட காரிலோ, சாரட் வண்டியிலோ பக்கத்திலுள்ள பிள்ளையார் கோவில் வரை ஊர்வலம் போவார். அப்போது, பாண்டு மற்றும் மங்கல வாத்தியக்காரர்களும் தங்கள் வாத்தியங்களை வாசித்தபடி முன் செல்வார்கள். பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆடிப் பாடிய படி உடன் செல்வார்கள். பிள்ளையார் கோவிலில் பெண்/மாப்பிள்ளை பெயருக்கு அர்ச்சனை செய்தபின் மண்டபத்திற்குத் திரும்பி வருவார்கள்.  ஜானவாசம் முடிந்தவுடன், மாப்பிள்ளை வீட்டாருக்கு பூம விருந்து வழங்கப்படும். 4 தலைவாழை இலைகளை சேர்த்துப் போட்டு, இலைக்கு முன் வர்ண கோலப்பொடி கொண்டு கோலம் போட்டு, அதன் முன் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி அலங்கரிப்பர். ஏகப்பட்ட பதார்த்தங்களைப் பரிமாறி, மாப்பிள்ளையை உபசரிப்பர். அவருக்கு இருபுறமும், அவர் வீட்டு ஜனங்களுக்கும் இலை போட்டு, ரங்கோலி இட்டு, உணவு பரிமாறி உபசரிப்பர். மணமகளின் தாயார், மாப்பிள்ளைக்கு பாயசம், அன்னம் பரிமாற வேண்டும். அவருக்கு அதற்காக  மாணமகனின் வீட்டார் புடவை, ரவிக்கை வைத்துக் கொடுப்பார்கள்.

19.ரிசப்ஷன் : ரிசப்ஷன் என்கிற வரவேற்பு உள்ளூரிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்களுக்காக பெண் வீட்டார் சார்பில் ஜானவாசத்தன்றோ, அல்லது திருமணம் முடிந்த பின்போ மாலை வேளையில் நடத்தப்படும். மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரில் திருமணம் முடிந்தபின் அதை வைத்துக் கொள்வார்கள். அழகாக அலங்கரிக்கப் பட்ட மேடையில் பெண், மாப்பிள்ளை அமர்ந்து கொண்டு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஜானவாச இரவு உணவு கிராண்டாக இருக்கும்.

20.மங்கள சூத்ரம் கோர்ப்பு : ஜானவாச இரவன்று, எல்லா வேலையும் முடிந்தபின்பு, மங்கள சூத்ரம் கோர்த்து வைத்து விட்டுதான் படுப்பார்கள். பொதுவாக, மாப்பிள்ளை வீட்டார் இரண்டு தாலியும், பெண் வீட்டார் ஒரு தாலியும் போடுவது வழக்கம். சில வீடுகளில் பழக்கங்கள் மாறுபடலாம். அவரவர் வீட்டு வழக்கப்படி செய்துகொள்வது நலம். அவரவர் பூஜை ரூமில் ஸ்வாமி முன்னால் 5 சுமங்கலிகள் அமர்ந்து கொண்டு தாலி கோர்ப்பார்கள். ட்வைன் நூலை மஞ்சள் நீரில் நனைத்து, பெண்ணின் அம்மா தங்கள் வீட்டுத் தாலியை முதலில் கோர்க்க, இரு பக்கமும் குண்டு மற்ற சுமங்கலிகள் கோர்ப்பார்கள். சில கருகுமணிகளையும் கோர்ப்பது வழக்கம். இதே போல், மாப்பிள்லை வீட்டார் இரண்டு தாலிகளை ரெடி செய்து வைப்பார்கள்.தாலிக்கு குங்குமம் தடவி, ஸ்வாமி படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும்.

மற்ற  விஷயங்களை அடுத்த வலைப்பதிவில் காண்போம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s